ரயில் பயணங்கள் என்றாலே அதை சுவாரசியமாக்குவது புத்தகங்கள் தான். கோவை விரைவு வண்டியில் ஏறும் பொழுது ரயில் பெட்டியை தேடுவதற்கு முன் கண்கள் தேடுவது புத்தகங்களை தான். சின்ன தள்ளுவண்டி கடையில் அனைத்து புத்தகங்களை மெதுவாக அசை போடுவது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு. அப்பா வழக்கமாக நியூஸ் பேப்பர் மற்றும் நக்கீரன் வாங்குவார். அம்மா எப்பொழுதும் ரமணி சந்திரன், பாலகுமாரன், தேவிபாலா நாவல்கள் மற்றும் குமுதம், விகடன் போன்ற வார ஏடுகளையும் வாங்குவார்.எனக்கு பிடித்தமான கிரைம் த்ரில்லர், ஹாரர் வகை நாவல்களை நான் வாங்குவேன். ராஜேஷ்குமார் ,சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் , இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் நிறைய படிப்பேன்.குறிப்பாக ராஜேஷ்குமார், சுபா நாவல்கள் எல்லாம் கொள்ளை பிரியம். நாவல்களை பதிப்பாளர் உரை மற்றும் முன்னுரையில் இருந்து படிக்க புடிக்கும்.
ராஜேஷ்குமார் நாவல்கள் ரொம்ப டைட்டாக சீரியஸாக போகும். விவேக் துப்பரிவாளர் மற்றும் அவர் மனைவி ரூபலா , இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் ,இவர்கள் தான் எல்லா நாவல்களின் பிரதான கதாபாத்திரங்கள். விவேக் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் , நேர்மையான அதிகாரி.கோகுல்நாத் கொஞ்சம் குண்டாக , சொட்டை தலையுடன், தொப்பையுடன் 50 வயது ஆளாக இன்னும் என் நினைவில் இருக்கிறார். இவர்கள் எல்லாம் நம்முடன் நிஜ உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை போன்ற பிரம்மை சில சமயம் ஏற்படுவது உண்டு. ரூபலா கர்பமாக இருக்கிறார் என்று சில கதைகளில் வரும். சில வாசகர்கள் ரூபலாக்கு சீர் செய்ய வளையல்களை பத்திரிக்கை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததை பார்த்து நெகிழ்ந்து போனதாக பதிப்பாசிரியர் அசோகன் எழுதியது இன்றும் நினைவில்.
சுபா அவர்களது நாவல்களில் திருப்பங்கள் நிறைந்து இருக்கும். பெரும்பாலும் நரேன் ,அவரது காதலி வைஜயந்தி இருவரும் சேர்ந்து தான் துப்பரிவார்கள். இதிலும் பால்ராஜ் என்று ஒரு இன்ஸ்பெக்டர் இருப்பார். ஆறடி உயரத்தில் முறுக்கு மீசையுடன் , 40 வயது மதிக்கதக்க நபர் என்று நினைவு. சுபா அவர்கள் எழுத்து நடையில் நகைச்சுவை கலந்து இருக்கும் , நரேன் கதாபாத்திரத்தை கொஞ்சம் ரோமண்டிக்காக சித்தரித்து இருப்பார். இரட்டை அர்த்த வார்த்தைகள் சற்று அதிகமாகவே இருக்கும். நரேன் ஷெர்லாக் ஹோம்ஸ் போன்ற உள்ளுணர்வு அபரிமிதமாக உள்ள பாத்திரம் சண்டை எல்லாமும் போடுவார். எனக்கு நரேனை விட செல்வா தான் ரொம்ப பிடிக்கும். செல்வா ஒரு underrated துப்பறிவாளர். ஒரு கால் வேறு பிரச்சினை என்று நினைக்கிறேன். மிகவும் witty n shrewd ஆக அந்த பாத்திரத்தை வடிவமைத்து இருப்பார். அவர் கூட வரும் முருகேஷ் ,சிறப்பம்சமாக அவரது சென்னை பாஷை வேறு லெவலில் நகைச்சுவை மிகுந்து இருக்கும். சில சமயம் தன்னிலை மறந்து வாய் விட்டு சிரித்த அனுபவமும் உண்டு. தீபாவளி அல்லது பொங்கல் சிறப்பு இதழ் என்று நினைக்கிறேன் நரேன் மற்றும் செல்வா இணைந்து துப்பறிவார்கள் பட்டாசாக இருக்கும்.
பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களது நாவலில் பரத் , சுசீலா பிரதான துப்பரிவளர்களாக இருப்பார்கள். சுசீலாவின் t-shirt வாசகம் அந்நாளில் மிக பிரசித்தம்.
இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் கடவுள்,சித்தர்கள், பேய் சார்ந்த கதைகளாக இருக்கும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களால் புனையப்பட்ட சித்தர் வாக்கு அல்லது புதிர் இருக்கும். மிகவும் தனித்துவம் வாய்ந்த அனுபவத்தை அது கொடுத்தது. இது நான் அறிந்திராத வேறு உலகம்.
கால மாற்றத்தில் நாவல் படிக்கும் பழக்கம் நீர்து போய் விட்டது. இப்போதெல்லாம் அடிக்கடி படிப்பது இல்லை. Netflix, series நிறைய வாசிப்பு நேரத்தை ஆக்கிரமித்து கொண்டு விட்டது.வாசிப்பு குறைந்து விட்டதே தவிர இன்னும் விட்டு விடவில்லை. ஆர்வம் மற்ற ஜானர்களுக்கு திரும்பி விட்டது. சரித்திர நாவல்கள், அலுவலக மேலாண்மை, தலைமை பண்பு, உளவியல் , சமூக நாவல்கள் என்று திரும்பி விட்டது. எனினும் இந்த கிரைம் நாவல்கள் ,தந்த அனுபவங்கள், முதல் காதலை போன்று அவ்வபோது நினைவில் வந்து வந்து செல்வதை தவிர்க்க முடிவதில்லை.
0 Responses "Crime Novels and Train Journey "
Post a Comment